தைப்பூசம்

Inuvil kanthan

தைப்பூசம்

தைமாதத்தில் வரும் பூச நட்சத்திரம் இந்துக்களால் பண்டுதொட்டு புண்ணியநன்னாளாகக் கணிக்கப்பட்டு இறைவழிபாட்டுக்குரிய முக்கிய தினமாகக் கொள்ளப்பட்டு வருகின்றது. இந்துக்களால் கணிக்கப்படும் இருபத்தியேழு நட்சத்திரங்களில் பூச நட்சத்திரம் எட்டாவதாக அமைகின்றது. தைமாதத்தில் வரும் பூச நட்சத்திரம் பௌர்ணமியுடன் கூடிய நாளாக அமைவதும் சிறப்புடையது. இந்நாளை தைப்பூசநன்னாளென்று கொண்டு இறைவழிபாட்டிற்கு உத்தமமான நாளாகக் கொள்கின்றோம்.

அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். பார்வதி தேவி பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கிது தைப்பூச நாளில் தான். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான். அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால் தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர்.

இன்நாளில் இணுவில் கந்தன் கோவிலில் மதியம் 1008 சங்காபிஷேகம் நடைபெற்று மாலை ஆறுமுகப்பெருமான் வல்லி தெய்வயானை சமேதராக திருமஞ்சவுலாவரும் காட்சி நடைபெறும்

தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள். முருகன் உறையும் எல்லா தளங்களிலுமே காவடி எடுக்கும் பக்தர்கள் உள்ளனர்.

சிறப்புகள்

* உலக சிருஷ்டியின் ஆரம்ப நாளாகவும் கொள்ளப்படுகின்றது.

* சிவபெருமான் உமா தேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.

* சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணிய வர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோவில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.


தைப்பூச விரதமுறை :

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். உணவு உண்ணாமல் 3 வேளைகளி லும் பால், பழம், சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.


இத்தைபூசத்திருநாளிலே தொடங்கும் செயல்கள் தொய்வின்றி இனிதே நிறைவேறும் என்பது காலம் காலமாக நாம் கொண்டுள்ள நம்பிக்கையாகும். நம்பிக்கையே வாழ்வை வழி நடத்தும் சக்தி. எமக்கும் மேலான சக்தியொன்று உண்டு. அந்தச் சக்தியின் மீது அதாவது உலகைப்படைத்து,காத்து, அருளி,அழித்து,மறைக்கும் அந்த மாபெரும் சக்தி மீது பக்திகொண்டு நம்பிக்கையுடன் வழிபட்டால் தன்னம்பிக்கை தானே நமக்கு வந்துவிடும். இறை சக்தியாகிய அதற்கு மேலான சக்தியொன்றில்லாத மாபெரும் சக்தி நமக்குத் துணைசெய்யும்.எம்மை வழிநடத்தும் என்ற நம்பிக்கை நம்மனதில் மேலோங்கிவிட்டால் தன்னம்பிக்கை தானே வந்து நம் வாழ்வை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளச்செய்யும். உலக சிருஷ்டியின் சிருஷ்டிகர்த்தாவின் மாபெரும் சக்தியின் உண்மையை உள்ளத்தில் இருத்தி அச்சம் இல்லாத நிம்மதியான பெருவாழ்வை எதிர் கொள்ள இத்தைப்பூச நன்னாளிலே சிவசக்தி பேரருளை நாடி வழிபடுவோம்

Share this post