சட்டி விரதம்
முருகனுக்குரிய விரதங்களில் திதி விரதம் சட்டி விரதம் ஆகும்
ஐப்பதி மாதத்தில் சுக்கிலபட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சட்டிவரை ஆறு தினங்கள் விரதம் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் வைகறையில் எழுந்து நீராடி பூரண கும்பத்தில் நீர் நிரப்பி மாவிலை வைத்து தருப்பையை வரிசையாக வைத்து சந்தனமும் அட்சதையும் வைத்து முருகனை ஆவாகனஞ் செய்து அர்ச்சித்து வழிபட வேண்டும். பகலில் உறங்குதல் கூடாது. ஆறு காலங்களிலமு; பூஜிக்க வேண்டும். கந்தனின் சரித்திரங்களைக் கேட்க வேண்டும். பாராயணம் புரிதல் வேண்டும் தியானம், ஜெபம் செய்தல் வேண்டும்.
இவ்வாறு மாதந்தோறும் வரும் சுக்கிலபட்ச சட்டி விரதம் இருப்பவர்களது வினைகள் வெந்து சாம்பலாகும். எண்ணிய நலமும் புண்ணிய பலமும் பெறுவர்.
திருக்கயிலாய மலையில் ஒரு சமயம் சிவபெருமான் ஒரு வில்வ மரத்தின் அடியில் அமர்ந்து சிவகாமசுந்தரிக்கு சிவ ஆகமங்களை உபதேசித்துக்கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் அந்த வில்வமரத்தின் மீதிருந்த ஒரு குரங்கு வில்வ இலைகளைப் பறித்து இறைவன் மிது வீசிக்கொண்டிருந்தது. சிவபெருமான் அதனைப் பொருட்படுத்தாமல் சிவாகமங்களை உபதேசித்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்தக் குரங்கு விளையாட்டாக மேலும் மேலும் வில்வ இலைகளைப் பறித்து இறைவன் மீது வீசிக்கொண்டே இருந்தது. அதைக்கண்ட பார்வதி தேவி சற்று கோபத்துடன் அந்த குரங்கைப் பார்த்தாள். தேவியின் சீற்றத்தை புரிந்துகொண்ட பரமேசுவரன், பார்வதியை நோக்கி 'பார்வதி ஏன் சினம் கொள்கிறாய்? எல்லா உயிர்களும் நம் குழந்தைகள்தானே, அவற்றின் செய்கைக்காக நாம் கோபம் கொள்ளலாமா? நும் குழந்தையான இக்குரங்கு நம்மீது இட்டது வில்வம்தானே பரவாயில்லை' என்று சினம் தனியச் சொன்னார். அம்பிகையின் திருப்பார்வை பெற்றதனால் அஞ்ஞானம் நீங்கப்பெற்று மெய்ஞானம் பெற்ற குரங்கு மரத்திலிருந்து கீழே இறங்கி அம்மையப்பனின் திருவடி தொழது 'அடியேன் அறியாது செய்த பிழையை பொறுத்தருள வேண்டும்' என்று வணங்கி நின்றது.
அதைக்கேட்ட ஈசன், 'குரங்கே! கவலை வேண்டாம், நீ என்மீத இட்டது வில்வம்தானே, நீ வேடிக்கையாக இட்டபோதும் இனி என்னை வில்வத்தால் அர்ச்சித்தவர் என்னருள் பெற்று எல்லா நலன்களும் பெறுவர். ஆதன்படி நீ சிவ புண்ணியம் செய்ததால் நீ மண்ணுலகில் அரசனாகப் பிறந்து சிறந்த செல்வ நலன்களை அனுபவிப்பாயாக' என்று வரமளித்தார்.
ஆனால் அக்குரங்கு, 'எந்தையே! வேண்டாம் நான் இக்கயிலையில் ஒரு புழுவாக வேண்டுமானாலும் வாழ்கிறேன், மானிடப் பிறவி மட்டும் வேண்டாம்' என்று அழுது புலம்பியது.
அதற்கு சிவபெருமான், 'வானரமே! செய்த துன்பங்களை நுகர்கிற இடம் மண்ணுலகே ஆகும். ஆகவே நீ உயர்ந்த குலமான அரிச்சந்திர குலத்தில் பிறந்து சக்கரவர்த்தியாக வாழ்வாயாக!. அங்ஙனம் வாழும்போது எமது குமாரனான முருகனின் பக்தனாக வாழ்ந்து கந்தசட்டி விரதங்களை முறையாக அனுஷ்டித்து மேலும் புண்ணியம் ஈட்டி கயிலைக்கு வருவாயாக!' என்று அருளினார்.
அதன்படி முசுகுந்தன் என்ற அரசனாகப் பிறந்து கரூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து முருக பக்தியில் சிறந்து விளங்கியதோடு சஷ்டி விரதத்தையும் கடைப்பிடித்து கயிலைப் பெருவாழ்வு பெற்றான்.
குரங்கு அறியாமையால் இறைவன்மீது வில்வ இலைகளை வீசியதை மன்னித்ததோடு இறைவன் அன்று முதல் வில்வ அர்ச்சனையை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டான். அதனாலேயே இன்றும் சிவாலயங்களில் வில்வத்தால் அர்ச்சனை செய்கிறோம்.